உள்நாட்டு சந்தையில் வாகன உதிரிப்பாகங்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடுகளும் இல்லை என வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் ஈடுபடும் நிறுவனங்களும், வாகன திருத்த வேலைகளில் ஈடுபடுவோரும் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் கழற்றப்பட்டு, அவற்றின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்வது தொடர்பில் பல ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் போதியளவு இல்லாமை காரணமாக இவ்வாறு வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களிலிருந்து கற்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டன.
இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில், கொழும்பிலுள்ள வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் விற்பனை நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது, அந்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் கருத்தின் பிரகாரம், கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் காணப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது நான்கு சக்கர பயணிகள் வாகனங்களான கார்கள் மற்றும் வேன்கள் போன்றவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன. ஆனாலும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் போதியளவு சந்தையில் உள்ளன. அவற்றுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக குறிப்பிட்டுவிட முடியாது. விலைகளில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வாகனங்களுக்கான சில உதிரிப்பாகங்கள் குறைந்தளவில் சந்தையில் காணப்படுகின்றன. எனும் வகையில் குறிப்பிட்டிருந்தனர்.