பூகோள வெப்பமயமாதலில் நாம் வாழும் பூமி மட்டுமல்லாமல் முழு பிரபஞ்சமுமே வெப்பத்தை அனுபவித்துவருவதாக அதிர்ச்சி ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஆய்வை CCAPP எனும் ஆராய்ச்சி மையம் நடத்தியது. இதன்படி பிரபஞ்சம் மோசமாக வெப்பமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சத்தின் வெப்ப வரலாற்றை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்த பின்னர் இந்த முடிவு பெறப்பட்டது.
அந்த ஆய்வின்படி, கடந்த 10 பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் முழுவதும் உள்ள வாயுக்களின் சராசரி வெப்பநிலை 10 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
தற்போதைய வெப்பநிலை சுமார் 2 மில்லியன் டிகிரி கெல்வினை எட்டியுள்ளது. இது சுமார் 4 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் ஆகும். CCAPP ஆராய்ச்சி சக ஊழியரான யி-குவான் சியாங் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியராக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய அளவீடு, 2019ஆம் ஆண்டு நோபல் பரிசின் இயற்பியல் வெற்றியாளரான ஜிம் பீபிள்ஸின் செல்வாக்குமிக்க படைப்புகளை நேராக உறுதிப்படுத்துகிறது எனக் கூறினார். பிரபஞ்சத்தில் பெரிய அளவிலான கட்டமைப்பு எவ்வாறு உருவாகிறது என்ற கோட்பாட்டை பீபிள்ஸ் வகுத்துள்ளார்.
பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியுடன், விண்வெளியில் இருக்கும் ஈர்ப்புவிசை மூலம் இருண்ட பொருள் மற்றும் வாயு ஆகியவை விண்மீன் மற்றும் விண்மீன் திரள்களால் இழுக்கப்படுவதாக ஆய்வு மேலும் விளக்கியுள்ளது.
இழுக்கும் நிகழ்வு மிகவும் வன்முறையாக நடப்பதால் விண்வெளியில் உள்ள வாயுக்கள் மேன்மேலும் அதிர்ச்சியடைந்து வெப்பமடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில், பூமியிலிருந்து தொலைவில் உள்ள வாயுவின் வெப்பநிலையை அளவிட விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையைப் பயன்படுத்தினர். அந்த அளவீடுகளை பூமிக்கு நெருக்கமான மற்றும் தற்போதைய நேரத்திற்கு அருகிலுள்ள வாயுக்களுடன் ஒப்பிட்டனர்.அண்ட கட்டமைப்பின் ஈர்ப்பு சரிவு காரணமாக காலப்போக்கில் பிரபஞ்சம் வெப்பமடைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல வெப்பமயமாதல் மேலும் தொடரும் என்றும் கூறியுள்ளனர். பிரபஞ்சத்தின் வெப்பநிலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைக் கண்காணிக்க பிளாங்க் மற்றும் ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வேயின் தரவு பயன்படுத்தப்பட்டது.
இதுபற்றி பேசிய ஆய்வின் முதன்மை ஆசிரியர், விண்மீன் மற்றும் கட்டமைப்பு உருவாக்கத்தின் இயற்கையான செயல்முறை காரணமாக பிரபஞ்சம் வெப்பமடைகிறது. இந்த செயல்முறை பூமியில் நடக்கும் புவி வெப்பமடைதலுடன் தொடர்பில்லாதது என்று விளக்கினார். இரண்டு நிகழ்வுகளும் மிகவும் மாறுபட்ட அளவுகளில் நடப்பதால் அவை இணைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.