Tamil elixir

ஞாபங்கள்..........................

“1964 என் பெரிய தந்தை ஆலடி அருணா சென்னையில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்ட போது ...
இப்புகைப்படத்தை பார்த்தவுடன் பல நினைவுகள் நெஞ்சில் நிழலாடியது !
கண்கள் தானாய் கசிந்தது....

எந்த பின்புலமும் இல்லாத விவசாய குடும்பத்தில் பிறந்து தன் அயராத உழைப்பு , ஆழ்ந்த அறிவு , பேச்சாற்றல், கரைபடா அரசியல் ,அப்பழுக்கற்ற அன்பு, அனைவரையும் சமமாக பாவிக்கும் உயர் பண்பு ஆகிய நற்குணங்களால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்....

எங்கள் குடுபத்தைத் தன் பாசத்தால் தாங்கி, இந்த உலகத்தில் எங்களுக்கு ஒரு மாபெரும் அடையாளத்தைத் தந்தவர் என் பெரிய தந்தை....
பிறந்தது ஆலடிப்பட்டியெனும் ஐந்தே தெருக்கள் கொண்ட குட் கிராமம் ..... தன் சிறு வயதிலேயே திராவிட இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு... வறுமையான குடும்ப சூழலிலும் படித்துப் பட்டம் பெற்று.... முறையாக படிப்படியாக முழுக்க முழுக்க தன் திறமையாலும் அறிவாற்றலாலும் உழைப்பாலும் திமுக வில் ஒரு முக்கிய முன்னணி தொண்டராக அறிஞர் அண்ணாவின் இதயத்திலும் கலைஞரின் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்தவர்....

முதல் முதலாய் பெரியப்பா தேர்தல் களம் கண்டது 1964..... அப்போது நான் பிறக்கவே இல்லை..... ஆனால் அந்தத் தேர்தல் பற்றியும்..... அந்தத் தேர்தலில் அம்மா வீடு வீடாக ஓட்டு சேகரிக்கச் சென்ற அனுபவத்தையும் பற்றி மிகவும் சுவார்யசியமாக எடுத்துச் செல்வார்..... அது கவுன்சிலர் தேர்தல் .......... அப்போது அம்மா கருவுற்றிருந்தக் காலம்.... சென்னை அவர்களுக்கு புதிதும் கூட..... ஓட்டுக் கேட்டு ஆட்டுத் தொட்டிக்குள் செல்ல.... அங்கு ஆடுமாடுகளை மொத்தம் மொத்தமாக வெட்டி வைத்திருக்க... இரத்தமும் சதையுமாய் வெட்டியத் தலைகளையும் பார்த்து.... அங்கு வந்த வாடையும் தாங்காமல் .... வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து விட்டார்களாம் .... அந்த ஆட்டுத் தொட்டிப் பெண்கள்தான் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து,
“இப்டி புள்ளத்தாச்சி பொம்பள ஏம்மா வந்தே?” என்று சொல்லி சூடாக கஞ்சி கொடுத்தார்களாம்..... இந்தப் படத்தை பார்த்தவுடன் அம்மாவின் நினைவாடல் நெஞ்சில் ......
“ஆனால் அங்க ஒங்க பெரியப்பாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது..... ஆனாலும் தோத்துட்டார் உங்க பெரியப்பா “ என்று அம்மா மிகவும் ஆதங்கத்தோடு சொல்வார்.....

ஆனால் அதற்குப்பின் வந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடினார்......

பெரியப்பாவின் ஒவ்வொரு தேர்தலும் எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை அதுவொரு குடும்ப முக்கியத் திருவிழா..... குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தேர்தல் களத்தில் இறங்கி உழைப்பார்கள்..... எங்களுக்கு எல்லாம் தேர்தல் முடியும்வரை பள்ளிக்கு மருத்துவ விடுப்பு..... மொத்தமாக எல்லோருக்கும் வீட்டில் ஒரு பெரியவர் பாதுகாப்பாக இருந்து சமைத்து எங்களை கவனித்துக் கொள்வார்....
பெரியப்பா ,பெரியம்மா ,அத்தை, மாமா ,அப்பா ,அம்மா இன்னும் பல நெருங்கிய உறவுகள் ் என்று பெரியவர்கள் அனைவரும் தேர்தல் பணிக்குக் காலையில் சென்று மாலை ஆறுமணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள்....

வீடு முழுக்க தேர்தல், பிரச்சாரதம், தொகுதி, பொதுக்கூட்டம், ஓட்டு ,எண்ணிக்கை ...என்று எங்கும் ஒரே அரசியல் வாடைதான் வீசும்.....

பெரியப்பா, பெரிய அத்தை , அப்பா,அம்மா அனைவரும் வழிநடத்த இன்று எங்களுடன் இல்லை..... இருந்தாலும் அவர்கள் எங்களுக்குப் புகட்டிய நற்பண்கள் எங்கள் குடும்பத்தை ஒற்றுமையாய் காத்து வழிநடத்திச் செல்கிறது..... பெரியப்பாவின் பாதையில் இன்று அக்கா Poongothai Aladi Aruna எங்களை வழிநடத்திச் செல்கின்றார்....
அமுதா! இதை அப்படிச் செய்.... இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு அவர்கள் தகுந்த நேரத்தில் ஆலோசனை கூறும்போதெல்லாம்........அது என் பெரியப்பாவின் உரிமையானப் பாசக் குரலாகவே என் இதயத்தில் ஒலிக்கும்......அவர் என்ஜினாய் இருந்து இழுக்க இரயில் பெட்டியில் சுகமாக அமர்ந்து நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! பயணம் தொடரும் என்றும் பாசத்தை சுமந்து...


உண்மையே பேச வேண்டும், அதுவே மதிப்பை உயர்த்தும்

தேவதையைக் கண்டேன்